பிரசவத்திற்கு பின் ஏற்படும் தொப்பையை குறைப்பது எப்படி?
பிரசவத்திற்குப் பின்னர் பெண்களுக்கு தொப்பை ஏற்படுவது என்பது இயல்பான ஒன்று. சுகப்பிரசவம் மூலமாகவோ அல்லது அறுவை சிகிச்சை மூலமாகவோ குழந்தை பிறக்கும் போது அதன் காரணமாக தொப்பை ஏற்படுவது இயற்கையான நிகழ்வு. இதை எளிதில் குறைக்கலாம்.
பிரசவத்திற்கு பின்னர் ஏற்படும் தொப்பையால் பெண்களின் உடலில் மட்டுமல்லாமல் அவர்களின் வாழ்விலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன. அவர்கள் உடுத்தும் உடையில் இருந்து உண்ணும் உணவு வரை பல்வேறு மாற்றங்கள் காணப்படும். மேலும் இந்த தொப்பையால் உடலளவில் மட்டுமல்லாமல் மனதளவிலும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
இதையும் படிங்க: கர்ப்ப கால தாம்பத்தியம் சிசுவை பாதிக்குமா?
அனைத்து பெண்களின் பெரும்பாலான விருப்பம் தான் அழகாக இருக்க வேண்டும் என்பது தான். அதிலும் தற்போது உள்ள இளம்வயது தாய்மார்கள் தங்களின் அழகு மீது அதிகளவு கவனம் செலுத்துகின்றனர். பிரசவத்திற்கு பின்னர் ஏற்படும் தொப்பையால் தனது அழகு குறைந்துவிட்டது என எண்ணி கவலைகொள்கின்றனர். மேலும் இந்த தொப்பையால் விரும்பிய ஆடைகளை அணியமுடியாமல் மேலும் மனதளவில் வருத்தப்படுகின்றனர்.
பல பெண்கள் தங்களின் தொப்பையை குறைக்க உணவு சாப்பிடாமல் டயட் இருப்பதாக நினைத்து உடல்நல பிரச்சனையை உருவாக்கிவைக்கின்றனர். இதன் காரணமாக தொப்பை மேலும் அதிகரிக்குமே தவிர குறையாது. சரியான வழிமுறையில் தொப்பையை குறைப்பது எப்படி என்று கற்றுக்கொண்டால் எளிதில் தொப்பையை குறைக்கலாம். மேலும் அழகான உடற்கட்டை பெறலாம்.
1.வயிற்றை இறுக்கி கட்டுதல்
இந்த முறையில் ஒரு நீளமான துணியை(துண்டு, துப்பட்டா அல்லது துணி போன்ற பட்டை) எடுத்து வயிற்றுப் பகுதியில் நன்றாக கட்டிக்கொள்ள வேண்டும். இம்முறையில் தொடர்ந்து 4 முதல் 6 வாரம் வரை கட்டி வந்தால் தொப்பை குறையும். சுகப்பிரசவம் மேற்கொண்ட தாய்மார்கள் மட்டுமே இந்த முறையை பின்பற்றவேண்டும். அறுவைசிகிச்சை மூலம் பிரசவம் மேற்கொண்ட பெண்கள் இதனை முயற்சிக்கவேண்டாம்.
2.எலுமிச்சைச்சாறு மற்றும் தேன்
இந்த வழிமுறையில் வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு எலுமிச்சைச்சாறு பிழிந்து அதனுடன் ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி தேன் கலந்து தினமும் காலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். தொடர்ந்து இவ்வாறு செய்து வந்தால் தொப்பையை விரைவில் குறைக்கலாம். மேலும் இதை சுகப்பிரசவம் மற்றும் அறுவைசிகிச்சை மூலம் பிரசவம் மேற்கொண்ட பெண்கள் பின்பற்றலாம்.
3.தாய்ப்பால்
தாய்மார்கள் தங்களின் குழந்தைக்கு தவறாமல் தினமும் தாய்ப்பால் கொடுத்து வந்தாலே அவர்களின் எடை நன்றாக குறையும். ஏனெனில் தாய்மார்கள் தங்களின் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதால் அவர்களின் உடலில் இருந்து 500 கலோரிகள் வரை எரிக்கப்படுகிறது.
4.தண்ணீர்
பிரசவம் மேற்கொண்ட தாய்மார்கள் தினமும் சராசரியாக 3 முதல் 4 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் அதிகமாக குடிப்பதால் உடலில் நீர்ச்சத்து அதிகரிக்கும். மேலும் உடலில் உளள தேவையற்ற நச்சுக்கள் வெளியேற்றப்படும். தண்ணீர் அதிகளவு குடிப்பதால் சருமம் நன்றாக பொலிவு பெறுவதோடு முகம் நன்றாக அழகுபெறும்.
5.இனிப்பு உணவுகள்
முடிந்த அளவு இனிப்பு பலகாரங்கள், இனிப்பு உணவுகள் மற்றும் சர்க்கரை அதிகம் சேர்த்தல் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். ஏனெனில் உடல் எடை அதிகரிப்புக்கு இனிப்பு முக்கியகாரணமாக உள்ளது. எனவே கூடியமட்டும் நாவைக் கட்டுப்பாட்டுக்குள் வைப்பது நன்மைபயக்கும்.
6.நடைப்பயிற்சி
நேரம் கிடைக்கும் போது நடைப்பயிற்சி செய்வது உடல் எடையை குறைக்க மிகவும் உதவுகிறது. நடைப்பயிற்சி செய்வதால் உடல் ஆரோக்கியம் பெறுவதோடு உடல் எடையும் குறையும். இதனால் மனமும் புத்துணர்ச்சி பெறும். மேலும் தொப்பையும் குறையும்.
7.உணவுமுறைகள்
தினமும் உண்ணும் உணவில் சிறு சிறு மாற்றங்களை செய்வதன் மூலம் எதிர்பார்த்த பலன்களை பெறலாம். உணவில் அதிகளவு உப்பு சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். சோடா மற்றும் கார்போனைட் கலந்த பானங்களை தவிர்க்க வேண்டும். நீர்ச்சத்து அதிகம் உள்ள பழங்களான பப்பாளி, மாம்பழம் மற்றும் திராட்சை போன்றவற்றை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
நார்ச்சத்து அதிகம் உள்ள பழங்கள், கீரைகள் மற்றும் காற்கறிகளை உணவில் அதிகளவு சேர்த்துக்கொள்ள வேண்டும். எண்ணெய் அதிகம் உள்ள மற்றும் கொழுப்புச்சத்து அதிகம் உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். மேலும் நொறுக்குத்தீனி மற்றும் சிற்றுண்டிகளை குறைக்க வேண்டும். இவை உடல் எடையை மேலும் அதிகரிக்க வேண்டும்.
8.சாப்பிடும் முறை
ஒரே நேரத்தில் அதிகமாக உணவு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஒரே நேரத்தில் சாப்பிடாமல் சிறிது நேர இடைவெளியில் கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடுவதால் உடல் எடை குறைய வாய்ப்புகள் அதிகம். இதனால் தொப்பையும் குறையும்.
9.உடற்பயிற்சி
பிரசவத்திற்கு பின்னர் எளிய உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். வயிற்றில் உள்ள அதிகப்படியான சதையை குறைக்கும் உடற்பயிற்சிகள் மற்றும் யோகாசனம் ஆகியவற்றை சரியான பயிற்சியாளரின் ஆலோசனைப்படி செய்ய வேண்டும். இதன் பலன்களை விரைவில் காணலாம். அறுவைச்சிகிச்சை மூலம் பிரசவம் மேற்கொண்ட தாய்மார்கள் சிறிது காலம் கழித்து உடற்பயிற்சி செய்யலாம்.
10.தூக்கம்
தினமும் போதிய அளவு தூக்கம் என்பது இருக்க வேண்டும். பெண்களுக்கு குழந்தை பிறந்த பின்னர் தூக்கம் என்பது பெரும்பாலும் இருக்காது. ஆனாலும் கிடைக்கும் நேரத்தில் முடிந்தளவு தூங்க வேண்டும். இதனால் உடலுக்கு தேவையான அளவு ஓய்வு கிடைக்கும். சரியான தூக்கம் இல்லாததால் உடல் எடை அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம். எனவே சரியான அளவு தூக்கம் என்பது அவசியமான ஒன்று.
11.மன அமைதி
மனதை எப்பொழுதும் அமைதியாகவும் நிம்மதியாகவும் வைத்துக்கொள்ள வேண்டும். மனஅழுத்தம் அதிகரிக்கும் போது அல்லது பதற்றம் அதிகரிக்கும் போது உடலும் பாதிக்கப்படுகிறது. இதனால் கூடவே உடல் எடையும் அதிகரிக்கிறது. எனவே மனதை எப்பொழுதும் அமைதியாக வைத்துக்கொள்ள வேண்டும்.


Comments
Post a Comment