பெண்களுக்கு ஏற்படும் பிறப்புறுப்பு வறட்சியும் தீர்வும்
பெண்களின் பிறப்புறுப்பில் வறட்சி ஏற்படுவது என்பது அனைத்து வயது பெண்களுக்கும் ஏற்படும் ஒரு பிரச்சனை. ஆனால் இந்த வறட்சியானது மாதவிடாய் நின்ற பெண்களுக்கு அதிகம் ஏற்படுகிறது. பெண்களின் உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவதே, பிறப்புறுப்பு வறட்சிக்கு முக்கியக் காரணமாகும்.
பெரும்பாலும் மாதவிடாய் நிற்கும் போது பெண்களின் உடலில் உள்ள ஈஸ்ட்ரோஜென் அளவு குறையும். ஈஸ்ட்ரோஜென் எனப்படும் ஹார்மோன் தான் பிறப்புறுப்பில் உயவுப் பொருளாக செயல்பட்டு, பிறப்புறுப்பு பகுதியை எப்பொழுதும் ஈரப்பசையுடன் வைத்துக் கொள்ளும். எனவே ஈஸ்ட்ரோஜென் குறைபாட்டால் தான் பிறப்புறுப்பு வறட்சி ஏற்படும்.
தாய்ப்பால் கொடுக்கும் போதோ அல்லது பிரசவ காலத்தின் போதோ பெண்களின் உடலில் ஈஸ்ட்ரோஜென் உற்பத்தி தற்காலிகமாக குறைந்திருக்கும். இதனால் மற்ற காலங்களை விட இக்காலத்தில் பிறப்புறுப்பு வறட்சி ஏற்படும்.
புற்றுநோய்க்கு கொடுக்கப்படும் சிகிச்சையின் காரணமாகவும் பிறப்புறுப்பில் வறட்சி ஏற்படலாம். மேலும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் சில நேரங்களில் பிறப்புறுப்பில் வறட்சி ஏற்பட வாய்ப்புண்டு. உடலுறவில் ஈடுபடும் முன்பு, போதிய அளவு பாலுணர்ச்சி தூண்டப்படாமல் இருந்தால், அதன் காரணமாகவும் பிறப்புறுப்பில் வறட்சி ஏற்படக்கூடும்.
பெண்களின் உடலில் உள்ள ஈஸ்ட்ரோஜன் எனப்படும் ஹார்மோனின் குறைவால், பிறப்புறுப்பின் அமிலத்தன்மை, வழவழப்புத் தன்மை மற்றும் அதன் நெகிழ்தன்மை ஆகியவை பாதிக்கப்படுகிறது. இதனால் பிறப்புறுப்பு வறண்டுபோகும் மேலும் அதில் உயவுத்தன்மை இருக்காது. இதனால் உடலுறவில் ஈடுபடும் ஆர்வம் குறையும் அல்லது உடலுறவுக்கான ஆசையை பாதிக்கும். மேலும் இதனால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும்.
பிறப்புறுப்பு அதிகம் வறட்சியுடன் இருந்தால், தாம்பத்தியத்தின் போது அதிக வலி ஏற்படும். மேலும் பிறப்புறுப்பில் எரிச்சல், அரிப்பு போன்ற அசௌகரியத்தை உணர்வதோடு, உச்சக்கட்ட இன்பத்தை அடைவதில் இடையூறு ஏற்படும். இதுபோன்ற சமயத்தில் உடலுறவை நிறுத்துவதுதான் மிகவும் நல்லது. இல்லையெனில் பிறப்புறுப்பில் பெரும் வலி ஏற்பட்டு அவஸ்தைப்பட நேரிடும்.
பிறப்புறுப்பு வறட்சிப் பிரச்சினை உள்ளவர்கள் மருத்துவர்களின் ஆலோசனைப்படி கிரீம்கள் மற்றும் ஜெல்கள் போன்றவற்றைப் பயன்படுத்தலாம். கிரீம் மற்றும் ஜெல் போன்றவை இல்லாவிட்டால் அவசரத்திற்கு பாடி லோஷன் கூட பயன்படுத்தலாம்.
கிரீம் மற்றும் ஜெல் போன்றவை பயன்படுத்தியும் கூட பிறப்புறுப்பு வறட்சி போகாவிட்டால் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது நலம். பிறப்புறுப்பில் ஏதேனும் தொற்று ஏற்பட்டிருந்தாலும் கூட பிறப்புறுப்பு வறட்சி ஏற்படலாம். ஒரு சில வகை ஆணுறைகள் கூட பிறப்புறுப்பு வறட்சி ஏற்படுத்தக் காரணமாக அமைகிறது.
இப்பிரச்சினை உள்ளவர்கள் அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். பெரும்பாலும் நீர்ச்சத்து குறைபாட்டாலும் பிறப்புறுப்பில் வறட்சி ஏற்படுகிறது. எனவே நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். மேலும் ஜூஸ் மற்றும் பழச்சாறு போன்றவை அடிக்கடி குடிக்க வேண்டும். இதனால் உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்கும்.
பிறப்புறுப்பை அதிகம் நீர் பீய்ச்சியடித்துக் கழுவுதலைத் தவிர்க்க வேண்டும் மற்றும் வாசனை திரவியம் கலந்த சோப்புகளைத் தவிர்க்க வேண்டும். உடலுறவின் போது பாலியல் கிளர்ச்சியைத் தூண்டும் ஃபோர் பிளே-க்கு அதிக நேரம் செலவிட வேண்டும். இதனால் பார்த்தோலின் சுரப்பி நன்கு வேலை செய்து பிறப்புறுப்பில் அதிக வழவழப்பு கிடைக்கும், பிறப்புறுப்பு வறட்சியைத் தவிர்க்கலாம்.

Comments
Post a Comment